Wednesday, July 05, 2006

இறுதிப்போட்டியில் இத்தாலியை சந்திக்கிறது பிரான்சு





பிரான்சு எதிர் போர்த்துக்கல் 1:0
அதிகளவு பரபரப்போ ஆக்ரோசமோ இல்லாமல் நடைபெற்றது இந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டி. ஒரு தண்டனை உதை மூலமாக கிடத்த வாய்ப்பினை பயன்படுத்தி பிரான்சு ஓரு கோல் அடித்தது. அதன்மூலம் மூலமாக பீகோ அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டியில் இத்தாலியை சந்திக்க சிடானின் அணி வருகிறது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் கூடிய ஈடுபாட்டை போர்த்துக்கலே வெளிப்படுத்தியது. முதல் கால்மணி நேரத்தில் பந்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள் கோலடிப்பதில் வெற்றிகாணவில்லை. போர்த்துக்கலின் றொனால்டோ விளையாட்டில் காட்டிய தீவிரத்தை மற்ற வீர்களிடம் காணமுடியவில்லை.

32ம் நிமிடத்தில் கோலடிப்பதற்காகப் பந்தை கொண்டுவந்த பிரான்சின் ஹென்றியை போர்த்துக்கலின் ஹார்வல்ஹோ விழுத்தியதால் தண்டனை உதை வாய்ப்பு பிரான்சுக்கு வாய்த்தது.


அதனை வெகு நேர்த்தியாக அடித்தார் பிரான்சின் அணித்தலைவர் சிடான். சிடான் பந்தினை அடித்த பக்கத்துக்கே காப்பாளர் றிகார்டோ பாய்ந்தார் ஆயினும் அடித்த வேகம் காரணமாக தடுத்தல் சாத்தியமாகவில்லை. அதன் பின் இருதரப்பிலும் கோல் எதுவும் இல்லை.

78ம் நிமிடத்தில் Free kick கில் றொனால்டோ வேகத்துடன் அடித்த ஒருபந்து பிரான்சுக்காப்பாளர் பார்த்தீஸால் பிடிக்கப்பட முடியாமல் இடறி மேலெழுந்தபோது அதனை இலகுவாக கோலாக்கக்கூடிய அருமையான வாய்ப்பு பீகோவுக்கு கிட்டியது. ஆனால் அவரது இடி சரிவர அமையாமல் பந்து மேலாகச்சென்று வலையில் விழுந்தது.



கடைசி நிமிடங்களில் கிடைத்த Corner Kick இரண்டையும் கோலாக்கிச் சமநிலை கண்டுவிட போர்த்துக்கலின் 11வீரர்களும் முயன்றனர். போர்த்துக்கலின் காப்பாளர் றிகார்டோ கூட பிரான்சின் பகுதிக்குள் வந்து விளையாடினார். எதுவும் நடக்கவில்லை. ஆட்டம் 1:0 என்றவகையில் முடிவடைந்தது.
பிரேசிலை வீழ்த்தியபோது இருந்த எந்தவிதமான துடிப்பையும் பிரான்சு வீரர்கள் காண்பிக்கவில்லை. இங்கிலாந்துடன் விளையாடிய போர்த்துக்கலின் திறனையும் காணமுடியவில்லை. சாதாரணமான ஒரு ஆட்டம் இது.

ஆட்டத்தின் நாயகன் பிரான்சின் தூராம்.

கோலடிக்கும் எத்தனங்கள் பிரான்சு 5 போர்த்துக்கல் 12 ஆகவும் பந்தை வைத்திருத்தல் பிரான்சு 41% போர்த்துக்கல் 59% ஆகவும் காணப்பட்டது. 3 மஞ்சள் அட்டைகள் மட்டுமே காட்டப்பட்டன.



இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சம். கோல்கணக்கில் 3 கோலுடன் நிற்கும் ஹென்றி இப்போட்டியில் எந்தக்கோலையும் அடிக்கவில்லை. எனவே தங்கக்காலணிGolden Shoe விருது ஜேர்மனியின் குளோஸவுக்கு என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது. குளோஸ 5 கோலுடன் முன்னணியில் உள்ளார். இந்த இருவருடன் இதற்கான போட்டியில் ஜேர்மனியின் பொடொல்ஸ்கியும் கூடவே நிற்கிறார். மூவருக்கும் விளையாடுவதற்கு ஒரு போட்டி கைவசம் உள்ளது. குளோஸவுக்கான வாய்ப்பு பிரகாசமானது.


No comments: