Saturday, July 08, 2006

மூன்றாம் இடத்தை ஜேர்மனி கைப்பற்றியது

ஆறுதல் பரிசும் அளவிலாக்
கொண்டாட்டமும்


ஜேர்மனியில் நடைபெறும் உலககிண்ணப்போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முதல்போட்டியாக நடைபெற்ற 3ம் இடத்துக்கான போட்டியில் ஜேர்மனி 3:1 என்ற கணக்கில் போர்த்துக்கலை
தோற்கடித்தது. முன்னர் அரையிறுதிப்போட்டியில்
கடைசி இருநிமிடங்களில் தோல்வியைத் தழுவியதனால் நாடுமுழுவதும் படுசோகத்தில் மூழ்கி இருந்தது. அச்சோகத்தை மறக்கடித்து பெரிய வெற்றியையீட்டி தனது ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல் பரிசை ஜேர்மன் அணி இன்று வழங்கியது. அந்த வெற்றிக்கு
காரணமான ஸ்வைன்ஸ்ரைகர் ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவானார்.




இன்றைய போட்டியில் இரு அணிகளதும் தலைவர்கள் ஆட்டம் தொடங்கும் போது அணியில் இடம் பெறவில்லை. ஜேர்மனியின் தலைவர் பலாக் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. போர்த்துக்கலின் தலைவர் கடைசி 13 நிமிடங்களுக்கே விளையாடினார்.
ஜேர்மனிக்கு தலைவராக பிரபல காப்பாளர் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லேமன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. போர்த்துக்கலின் தலைவராக பௌலெற்றா பங்கேற்றார்.




ஆட்டத்தின் முற்பாதியில் இரு தரப்பும் மிக விறுவிறுப்பாக விளையாடியும் முன்னணிவீரர்கள் மிக முயன்றும் கோல் எதுவுமின்றி முன்பாதி சமநிலை கண்டது.


பின் பாதி தொடங்கி 11வது நிமிடத்தில் ஜெர்மனியின் நடுக்கள வீரர் ஸ்வைஸ்ரைகர் முன்னணிவீரர்களுக்கு பந்தை கொடுப்பதனை தவிர்த்து தூரத்தில் வைத்து வேகமாக அடித்த பந்து முதல் கோலாகி ஜேர்மனியின் விசிறிகளை கோலாகலப்படுத்தியது. தொடர்ந்து நாலே நிமிடங்களில் கிடைத்த Free kick ஐயும் ஸ்வைன்ஸ்ரைகரே அடிக்க அது கோலாவதைத் தடுக்க போர்த்துக்கலின் வீரர் பெரிற் முயன்றபோது அது தவறி தன்பக்கக் கோலாக மாற 2:0 என ஜேர்மனி பலமான நிலைகொண்டது. இதனை தொடர்ந்து போர்த்துக்கல் வீரர்களது ஆட்டத்திலும் படு தீவிரம் பற்றிக் கொண்டது. போர்த்துக்கலின் வீரர் டெகோ, றொனால்டோ ஆகியோர் கோலடிப்பதற்கு மிகவும் பாடுபட்டனர். 77ம் நிமிடத்தில் பௌலெற்றா மாற்றப்பட்டு பீகோ கொண்டுவரப்பட்டார். அவர் வந்த மறுநிமிடமே அடுத்த சோதனையைப் போர்த்துக்கல் எதிர்கொண்டது. இன்றைய போட்டியின் நாயகன் ஸ்வைஸ்ரைகர் 25 யார் தூரத்திலிருந்து ஒரு தாக்குதலை மீண்டும் தொடுத்தார். றிகார்டோவின் தடுப்பு முயற்சி பலனின்றி அதுவும் கோலாகி ரசிகர்களை மிகப்பரவசப்படுத்தியது. பின்னர் 88ம் நிமிடத்தில் பீகோ வலது புறமிருந்து அளவாக தூக்கிக் கொடுத்த பந்தை கோமஸ் அற்புதமாக தலையாலிடித்துக்



கோலாக்கினார். இன்று களமிறங்கிய காப்பாளர் கான் அதற்கு முன் பல அடிகளை கோலாக விடாமல் ஜேர்மனியைக் காப்பாற்றியிருந்தார். ஆயினும் இந்த தலை இடியை பிடிப்பதற்கு அவருக்கு இயலவில்லை. மிகச்சிறப்பான இடி அது.


பந்தை விளையாடிய நிலைமை 57% போர்த்துக்கல் 43%ஜேர்மனி என போர்த்துக்கலின் ஆதிக்கத்தையே காட்டியது. கோலடிப்பதற்கான எத்தனங்கள் போர்த்துக்கல் 13 ஜேர்மனி12 எனக்காணப்பட்டது.


பீகோவுக்கு இது இறுதிச் சர்வதேச விளையாட்டு. அவரைப் போர்த்துக்கல் நாட்டினர் என்றும் நினைவில் கொள்வர். அவர் கடைசி நிமிடங்களில் பந்தைச் சிறப்பாகக் கடவு செய்தமையும் அதன் பேறான கோலும் அவர்களின் மனதில் நிலைத்திருக்கும். இல்லையெனில் ஒரு கோலைக் கூட அடிக்க முடியாமல்போன கவலை அவர்களை வாட்டியிருக்கும்.




போர்த்துக்கல் அணியினருக்கு ஆறுதலாக ஒரு கோல். ஜேர்மன் அணியினருக்கு ஆறுதல் பரிசாக 3ம் இடம். அதனால் வாண வேடிக்கைகளுடன் அவர்கள் அதனை கொண்டாடுகின்றனர். முக்கியமாக வெற்றியை தன் விளையாட்டால் வழங்கிய ஸ்வைன்ஸ்ரைகரை அனைவரும் போற்றுகின்றனர். வெற்றிக்கு அவர்கள் நம்பியிருந்த குளோசவோ இளவயதுநாயகன் விருதுக்கு தேர்வான பொடொல்ஸ்கியோ ஒரு கோலையும் அவர்களுக்கு வழங்கவில்லை.


ஜேர்மன் அணி 13 கோலுடன் இவ்வுலக கிண்னப்போட்டியில் முன்னிலையில் இருக்கிறது. அடுத்து 11 கோலுடன் நிற்கும் இத்தாலி அதனை முறியடிக்குமா என்பது கேள்விக்குரியது.
தனிநபர் கோல் சாதனையிலும் ஜேர்மனியின் குளோஸவே 5 கோலுடன் முன் நிற்பவர். பிரான்சின் ஹென்றி அதனை மீற 3 கோலடிக்க வேண்டும். அதுவும் சாத்தியமாகத் தோன்றவில்லை. எனவே கோல் வகையில் அதிகம் என்பவையெல்லாம் ஜேர்மனிக்கு மட்டுமே என்பது எனதெண்ணம்.


No comments: