Monday, July 10, 2006

உலகக்கிண்ணத்தை இத்தாலி வென்றது!

இப்போதைய உலக கிண்னத்தை வடிவமைத்த சிற்பி ஒரு இத்தாலியர். இம்முறை தனது நாட்டுக்கே அது கொண்டுவரப்படவேண்டும் என அவர் விரும்பியதாக ஒரு தகவலை முன்பு கேள்விப்பட்டு இருந்தேன். தகவல் சரியோ தவறோ தெரியாது. அதன்படி நடந்தேறிவிட்டது.


சற்றுமுன் தங்களுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வென்று உலக கிண்ணத்தை இத்தாலிவீரர்கள் கொண்டு செல்கிறார்கள்.


இன்றைய இறுதிப்போட்டி படு விறுவிறுப்பானது. போட்டிதொடங்கி 7ம் நிமிடத்தில் ஒரு தண்டனை உதையை பயன்படுத்தி முதல்கோலை சிடான் அடித்தார். மலூடா விழுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பு வந்தது. பிரான்சு 1:0 எனமுன்னிலைக்கு வந்தது. ஆனால் அந்நிலைமை நீடிக்கவில்லை. 18ம் நிமிடத்தில் மற்றறாஸி


ஒரு கோணர்கிக்கை தலையால் அற்புதமாக இடித்தது ஒரு கோலைப் போட்டார். இருநாடுகளும் கண்ட சமநிலை 100 நிமிடங்களுக்கு மேல் நின்று நீடித்தது.
முதல் 90நிமிட விளையாட்டின்
முன் பாதியில் இத்தாலியின் ஆதிக்கமும் பின் பாதியில் பிரான்சின் ஆதிக்கமும் போட்டியில் காணப்பட்டது. ஆயினும் கோல் எதனையும் எவரும் அடிக்காமையால் 30நிமிட நீடிப்பு நேரம் வழங்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்களில் மாற்றம் வரவில்லை சில வீரர்கள் மாற்றப்பட்டு இருந்தனர்.
பிரான்சின் முன்னணிவீரர் ஹென்றி 107 நிமிடத்திலும் றிபேறி 100 நிமிடத்திலும் திருப்பி அழைக்கப்பட்டு வில்ரோர்ட், றெசெகுற் இறக்கப்பட்டு இருந்தார்கள். இத்தாலி தரப்பிலும் டொட்டி, பெறோற்ற ஆகியோர் 61ம் நிமிடத்திலும் கமரானோசி 86ம் நிமிடத்திலும் மாற்றப்பட்டு இருந்தனர்.
இறுதி 15வது நிமிடத்தில் மிகப்பரபரப்பான எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம் பெற்றது. இத்தாலி வீரர் மாற்றறாஸியை நெஞ்சில் தன் தலையால் இடித்து சிடான் விழுத்தினார். அதனால் சிவப்பு அட்டைபெற்று வெளியேறினார். ஓர் ஒப்பற்ற வீரரான சிடானிடம் இவ்விதமான நடத்தையை எவரும் எதிர்பார்க்கவில்லை.

(இந்த உலககிண்ணப்போட்டிகளில் தங்கப்பந்துவிருதினை இவர் வெல்வார் என எதிர்பார்ப்புகள் இருந்தன. கருத்துக்கணிப்பில் சரிபாதியளவுக்கு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. மீதியைத்தான் மற்றைய் 9 வீரர்கள் பெற்றிருந்தனர். )சிடான் இன்னொரு உலககிண்ணம் விளையாடப்போவதில்லை. வயது 34 ஆகிவிட்டது. பொறுமை காக்காமையால் பெரும் விமர்சனங்களுக்காளாகியுள்ளார். ஒரு முக்கியமான விடயம் என்னவெனில்
1)பிரான்சுக்கு தண்டனைஉதை வழங்கப்படக் காரணமாக மலூடாவை விழுத்தியவர்,
2)தலையால் தட்டி கோலடித்து இத்தாலியை 1:1 எனச் சமநிலைப்படுத்தியவர்,
3)சிடானினால் நெஞ்சில் தலையால் இடித்து விழுத்தப்பட்டவர்
எல்லாமே ஒரேநபர்தான். பெயர் மற்றறாஸி.

சிடான் வெளியேறியபின் 10 பேருடன் பிரான்சு விளையாடியது. இத்தாலி இறுதி நிமிடத்தில் தீவிரம் காட்டியும் கோலடிக்கமுடியவில்லை. எனவே தண்டனை உதைமூலமாக வெற்றியை நிர்ணயிக்கும் நிலை வந்தது. இதில் இரு கோல்காப்பாளர்களும் எந்தக்கோலையும் தடுக்கவில்லை. எனினும் பிரான்சின் வீரர் றேசெகூற் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியமையால் பிரான்சு 5:3 கணக்கில் தோற்றுப்போனது.

2ம் தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்தை இழந்து பிரான்சு வெளியேற இத்தாலி 4வது தடவையாக உலக கிண்ணத்தைக் கைப்பற்றியது. இப்போது பிரேசில் 5 இத்தாலி 4 ஜேர்மனி 3 என உலககிண்ணத்தை கைப்பற்றிய வரிசைஅமைகின்றது. இனிப் பிரேசிலைப் பிடிப்பது இத்தாலியின் இலட்சியமாகலாம்.
இறுதிப்போட்டியின் நாயகன் இத்தாலியின் பிர்லே.
பந்துக்கட்டுப்பாடு இத்தாலி 55% பிரான்சு 45%
கோல் எத்தனங்கள் இத்தாலி 5 பிரான்சு 13
மஞ்சள் அட்டை இத்தாலி 1 பிரான்சு 3
சிவப்பு அட்டை பிரான்சு 1 (சிடான் உ.கி.இறுதிப்போட்டியில் சிவப்பு அட்டைபெற்ற 4ம் வீரன் என்கிற தகைமையைப்பெற்றுள்ளார்.)

1 comment:

VSK said...

தலையால் முட்டி பந்தை கோலுக்குள் அடிக்கத் தவறிய ஃஜிடான், இத்தாலி ஆட்டக்காரரை தலையால் முட்டி, அவமானப்பட்டு வெளியேறிய போதே ஒருவாறு முடிவு தெரிந்து விட்டது!

கடைசியில், கோப்பையைத் தாண்டி தலை குனிந்து சென்ற சோகம் இன்னும் கண்களில் நிற்கிறது.

இத்தாலிக்கு வாழ்த்துகள்!