Monday, July 10, 2006

தங்கப்பந்து சிடானுக்கே!

லககிண்ணப்போட்டி 2006 ஜேர்மனி - யின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்துவிருது GOLDEN BALL பிரான்சின் அணித்தலைவர் சிடானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதினை உலகம் முழுவதிலுமிருந்து ஊடகவிலாளர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். அவ்வகையில் 2012 வாக்குகளை வென்ற அவர் இவ்விருதுக்குத் தேர்வானார். அடுத்து இத்தாலியின் அணித்தலைவர் கன்னவாரோ 1977 வாக்குகளும் மும்முறை ஆட்டநாயகன் விருது பெற்றவரான இத்தாலியின் பிர்லோ 715 வாக்குகளும் பெற்றனர்.
மிகச்சிறப்பாக தன் அணியினரை வழிநடாத்திய, சிறப்புற விளையாடிய சிடான் இவ்விருதினை நிச்சயம் வெல்வார் என எதிர்பார்ப்புகள் மேலோங்கியிருந்த வேளையில் அந்நிலைமை கேள்விக்குறியானது. இறுதி ஆட்டத்தில் இத்தாலிவீரரை தலையால் மோதி விழுத்தியதற்காக சிகப்பு அட்டைபெற்று வெளியேற்றப்பட்டமை பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியது.
ஆனால் இப்போது வெளியான வாக்களிப்பு விவரம் சிடானுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
கடைசிநேர தப்பிதமான நடத்தையைவிட போட்டியில் அவரது முன்னைய சிறப்பு அம்சங்களைச் சீர்தூக்கிப்பார்த்து ஊடகவியலாளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு வித்தியாசம் (35)குறைந்தமைக்கு அவரது நடத்தை நிச்சயமான காரணமாகிறது. மிகபெரு வித்தியாசத்தில் வெல்வார் எனகிற எதிர்பார்ப்பு முன்பு நிலவியது.
பிரான்சின் தென்புல கடலோர நகர் மார்சயிலில் 23.06.1972 ல் பிறந்தவர் சிடான். பெற்றார் அல்ஜீரியாவிலிருந்து வந்து குடியேறிய இசுலாமிய மதத்தவர். 1994 முதல் பிரான்சின் தேசிய அணியில் பங்கு கொண்டு விளையாடுபவர். 1998பிரான்சு உலககிண்ணப் போட்டியில் பிரான்சு உலககிண்ணத்தை கைப்பற்றுவதற்கு இவரது விளையாட்டுத்திறன் பிரதான காரணியாகியது. அன்றிலிருந்து அவர் பெரும் கதாநாயகனாக மதிப்பளிக்கப்பட்டு வந்தார். பிரான்சு நாட்டுக்காக 107 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார். இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளிலும் அதற்கு முன்பதாக பிரான்சின் இரு கழகங்களுக்காக 200 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

2 comments:

Anonymous said...

இறுதிப்போட்டியில் அவர் நடந்துகொண்ட முறை மிகக்கீழ்த்தரமானது. அதன்பின்னும் இவருக்கு விருது கிடைப்பது வருத்தத்துக்குரியது.
ஆனாலும் போட்டி எந்த விதிமுறைக்கும் உட்படாமல் தனியே வாக்களிப்பில் மட்டுமே தங்கியுள்ளதால் இதைத் தவிர்க்க முடியாது.

Kp said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
தாயை பழித்தவனை யார்தடுத்தாலும் விடேன்..... என்றவகையில் சினமடைய வைக்கப்பட்டார் எனக் கதைகள் வருகின்றன. மற்றறாசி ஏதோ சொன்னார் என்பதும் அதானால் இவர் சினம்கொண்டார் என்பதும் மட்டுமே எங்களுக்கு காட்சியாக வந்தது. இத்தாலியில் 5வருடம் விளையாடியவர் சிடான் என்பதால் அங்குள்ள ஊத்தை வார்த்தைகளுக்கு நன்கு பழக்கப்பட்டவர். எனவே ஆட்திரமூட்டல் என்பது கடுமையான வார்த்தைகளால் தான் என்பது சாத்தியமே! ஆயினும் ஒருநல்லவீரர், அணித்தலைவர் தலைவர் தன்னைக்கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
இத்தாலியரால் மட்டுமல்ல சொந்த நாட்டிலும் பழமைவாத இனவாதிகளின் பலவித சுடு சொற்களை எதிர் கொண்டவர்கள் பிரான்சிய அணியினர். பிரான்சு என்பது ஒரு வட ஆபிரிக்க நாடு எனவும் அதன் மொழி அரபு என்றும் கூறுபவர்கள் அங்கு உள்ளார்கள். பாரிசில் நடைபெற்ற இன்றைய வரவேற்பு நிகழ்வைப் பார்த்தீர்களா?