Saturday, July 08, 2006

மூன்றாம் இடத்தை ஜேர்மனி கைப்பற்றியது

ஆறுதல் பரிசும் அளவிலாக்
கொண்டாட்டமும்


ஜேர்மனியில் நடைபெறும் உலககிண்ணப்போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முதல்போட்டியாக நடைபெற்ற 3ம் இடத்துக்கான போட்டியில் ஜேர்மனி 3:1 என்ற கணக்கில் போர்த்துக்கலை
தோற்கடித்தது. முன்னர் அரையிறுதிப்போட்டியில்
கடைசி இருநிமிடங்களில் தோல்வியைத் தழுவியதனால் நாடுமுழுவதும் படுசோகத்தில் மூழ்கி இருந்தது. அச்சோகத்தை மறக்கடித்து பெரிய வெற்றியையீட்டி தனது ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல் பரிசை ஜேர்மன் அணி இன்று வழங்கியது. அந்த வெற்றிக்கு
காரணமான ஸ்வைன்ஸ்ரைகர் ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவானார்.




இன்றைய போட்டியில் இரு அணிகளதும் தலைவர்கள் ஆட்டம் தொடங்கும் போது அணியில் இடம் பெறவில்லை. ஜேர்மனியின் தலைவர் பலாக் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. போர்த்துக்கலின் தலைவர் கடைசி 13 நிமிடங்களுக்கே விளையாடினார்.
ஜேர்மனிக்கு தலைவராக பிரபல காப்பாளர் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லேமன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. போர்த்துக்கலின் தலைவராக பௌலெற்றா பங்கேற்றார்.




ஆட்டத்தின் முற்பாதியில் இரு தரப்பும் மிக விறுவிறுப்பாக விளையாடியும் முன்னணிவீரர்கள் மிக முயன்றும் கோல் எதுவுமின்றி முன்பாதி சமநிலை கண்டது.


பின் பாதி தொடங்கி 11வது நிமிடத்தில் ஜெர்மனியின் நடுக்கள வீரர் ஸ்வைஸ்ரைகர் முன்னணிவீரர்களுக்கு பந்தை கொடுப்பதனை தவிர்த்து தூரத்தில் வைத்து வேகமாக அடித்த பந்து முதல் கோலாகி ஜேர்மனியின் விசிறிகளை கோலாகலப்படுத்தியது. தொடர்ந்து நாலே நிமிடங்களில் கிடைத்த Free kick ஐயும் ஸ்வைன்ஸ்ரைகரே அடிக்க அது கோலாவதைத் தடுக்க போர்த்துக்கலின் வீரர் பெரிற் முயன்றபோது அது தவறி தன்பக்கக் கோலாக மாற 2:0 என ஜேர்மனி பலமான நிலைகொண்டது. இதனை தொடர்ந்து போர்த்துக்கல் வீரர்களது ஆட்டத்திலும் படு தீவிரம் பற்றிக் கொண்டது. போர்த்துக்கலின் வீரர் டெகோ, றொனால்டோ ஆகியோர் கோலடிப்பதற்கு மிகவும் பாடுபட்டனர். 77ம் நிமிடத்தில் பௌலெற்றா மாற்றப்பட்டு பீகோ கொண்டுவரப்பட்டார். அவர் வந்த மறுநிமிடமே அடுத்த சோதனையைப் போர்த்துக்கல் எதிர்கொண்டது. இன்றைய போட்டியின் நாயகன் ஸ்வைஸ்ரைகர் 25 யார் தூரத்திலிருந்து ஒரு தாக்குதலை மீண்டும் தொடுத்தார். றிகார்டோவின் தடுப்பு முயற்சி பலனின்றி அதுவும் கோலாகி ரசிகர்களை மிகப்பரவசப்படுத்தியது. பின்னர் 88ம் நிமிடத்தில் பீகோ வலது புறமிருந்து அளவாக தூக்கிக் கொடுத்த பந்தை கோமஸ் அற்புதமாக தலையாலிடித்துக்



கோலாக்கினார். இன்று களமிறங்கிய காப்பாளர் கான் அதற்கு முன் பல அடிகளை கோலாக விடாமல் ஜேர்மனியைக் காப்பாற்றியிருந்தார். ஆயினும் இந்த தலை இடியை பிடிப்பதற்கு அவருக்கு இயலவில்லை. மிகச்சிறப்பான இடி அது.


பந்தை விளையாடிய நிலைமை 57% போர்த்துக்கல் 43%ஜேர்மனி என போர்த்துக்கலின் ஆதிக்கத்தையே காட்டியது. கோலடிப்பதற்கான எத்தனங்கள் போர்த்துக்கல் 13 ஜேர்மனி12 எனக்காணப்பட்டது.


பீகோவுக்கு இது இறுதிச் சர்வதேச விளையாட்டு. அவரைப் போர்த்துக்கல் நாட்டினர் என்றும் நினைவில் கொள்வர். அவர் கடைசி நிமிடங்களில் பந்தைச் சிறப்பாகக் கடவு செய்தமையும் அதன் பேறான கோலும் அவர்களின் மனதில் நிலைத்திருக்கும். இல்லையெனில் ஒரு கோலைக் கூட அடிக்க முடியாமல்போன கவலை அவர்களை வாட்டியிருக்கும்.




போர்த்துக்கல் அணியினருக்கு ஆறுதலாக ஒரு கோல். ஜேர்மன் அணியினருக்கு ஆறுதல் பரிசாக 3ம் இடம். அதனால் வாண வேடிக்கைகளுடன் அவர்கள் அதனை கொண்டாடுகின்றனர். முக்கியமாக வெற்றியை தன் விளையாட்டால் வழங்கிய ஸ்வைன்ஸ்ரைகரை அனைவரும் போற்றுகின்றனர். வெற்றிக்கு அவர்கள் நம்பியிருந்த குளோசவோ இளவயதுநாயகன் விருதுக்கு தேர்வான பொடொல்ஸ்கியோ ஒரு கோலையும் அவர்களுக்கு வழங்கவில்லை.


ஜேர்மன் அணி 13 கோலுடன் இவ்வுலக கிண்னப்போட்டியில் முன்னிலையில் இருக்கிறது. அடுத்து 11 கோலுடன் நிற்கும் இத்தாலி அதனை முறியடிக்குமா என்பது கேள்விக்குரியது.
தனிநபர் கோல் சாதனையிலும் ஜேர்மனியின் குளோஸவே 5 கோலுடன் முன் நிற்பவர். பிரான்சின் ஹென்றி அதனை மீற 3 கோலடிக்க வேண்டும். அதுவும் சாத்தியமாகத் தோன்றவில்லை. எனவே கோல் வகையில் அதிகம் என்பவையெல்லாம் ஜேர்மனிக்கு மட்டுமே என்பது எனதெண்ணம்.


Friday, July 07, 2006

இறுதிக்கு முன் வரும் சிறுசிறு தகவல்கள்

1)ஜேர்மனியின் வீரன் லூகாஸ் பொடெல்ஸ்கி சிறந்த இளம்வீரன் விருதினை வென்றுள்ளார். கால்பந்தாட்ட வல்லுநர்கள் மற்றும் விசிறிகளின் வாக்குகளின் அடிப்படையில் இத்தெரிவு இடம்பெற்றது. ஒரு மில்லியனுக்கு மேலான வாக்குகள் பொடெல்ஸ்கிக்கு கிடைத்தது.

2)நாளைய ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கலின் பாதுகாப்பு அணிவீரர் மிகுஎல் விளையாடமாட்டார்.

3)தங்கக்காலணிவிருது ஜேர்மனியின் குளோஸவுக்கு என்பது நிச்சயமாகிறது. பிரான்சின் ஹென்றி 3 கோல்களுடனும் குளோஸ் 5கோல்களுடனும் முன்னிலையில் இருக்கின்றனர். இளம்புயல் பொடில்ஸ்கியும் (3)அவர்களுடன்.

4)உ.கி.2006 ன் தங்கப்பந்துGolden Ball விருதுக்கு ஜேர்மனியின் பலாக், குளோஸ ஆகியோர் பெயர்கள் ப்ரிசீலனையில் உள்ளன. இவ்வகையில் போட்டியில் உள்ளவர்கள் இவர்கள்

M Michael Ballack, Germany
G Gianluigi Buffon, Italy
D Fabio Cannavaro, Italy
F Thierry Henry, France
F Miroslav Klose, Germany
M Maniche, Portugal
M Andrea Pirlo, Italy
M Patrick Vieira, France
D Gianluca Zambrotta, Italy
M Zinedine Zidane, France அதிகவாய்ப்பு ஸிடானுக்கு

கிண்ணக் கனவுகளில் மிதக்குமிரு தேசங்கள்!












Wednesday, July 05, 2006

இறுதிப்போட்டியில் இத்தாலியை சந்திக்கிறது பிரான்சு





பிரான்சு எதிர் போர்த்துக்கல் 1:0
அதிகளவு பரபரப்போ ஆக்ரோசமோ இல்லாமல் நடைபெற்றது இந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டி. ஒரு தண்டனை உதை மூலமாக கிடத்த வாய்ப்பினை பயன்படுத்தி பிரான்சு ஓரு கோல் அடித்தது. அதன்மூலம் மூலமாக பீகோ அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டியில் இத்தாலியை சந்திக்க சிடானின் அணி வருகிறது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் கூடிய ஈடுபாட்டை போர்த்துக்கலே வெளிப்படுத்தியது. முதல் கால்மணி நேரத்தில் பந்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள் கோலடிப்பதில் வெற்றிகாணவில்லை. போர்த்துக்கலின் றொனால்டோ விளையாட்டில் காட்டிய தீவிரத்தை மற்ற வீர்களிடம் காணமுடியவில்லை.

32ம் நிமிடத்தில் கோலடிப்பதற்காகப் பந்தை கொண்டுவந்த பிரான்சின் ஹென்றியை போர்த்துக்கலின் ஹார்வல்ஹோ விழுத்தியதால் தண்டனை உதை வாய்ப்பு பிரான்சுக்கு வாய்த்தது.


அதனை வெகு நேர்த்தியாக அடித்தார் பிரான்சின் அணித்தலைவர் சிடான். சிடான் பந்தினை அடித்த பக்கத்துக்கே காப்பாளர் றிகார்டோ பாய்ந்தார் ஆயினும் அடித்த வேகம் காரணமாக தடுத்தல் சாத்தியமாகவில்லை. அதன் பின் இருதரப்பிலும் கோல் எதுவும் இல்லை.

78ம் நிமிடத்தில் Free kick கில் றொனால்டோ வேகத்துடன் அடித்த ஒருபந்து பிரான்சுக்காப்பாளர் பார்த்தீஸால் பிடிக்கப்பட முடியாமல் இடறி மேலெழுந்தபோது அதனை இலகுவாக கோலாக்கக்கூடிய அருமையான வாய்ப்பு பீகோவுக்கு கிட்டியது. ஆனால் அவரது இடி சரிவர அமையாமல் பந்து மேலாகச்சென்று வலையில் விழுந்தது.



கடைசி நிமிடங்களில் கிடைத்த Corner Kick இரண்டையும் கோலாக்கிச் சமநிலை கண்டுவிட போர்த்துக்கலின் 11வீரர்களும் முயன்றனர். போர்த்துக்கலின் காப்பாளர் றிகார்டோ கூட பிரான்சின் பகுதிக்குள் வந்து விளையாடினார். எதுவும் நடக்கவில்லை. ஆட்டம் 1:0 என்றவகையில் முடிவடைந்தது.
பிரேசிலை வீழ்த்தியபோது இருந்த எந்தவிதமான துடிப்பையும் பிரான்சு வீரர்கள் காண்பிக்கவில்லை. இங்கிலாந்துடன் விளையாடிய போர்த்துக்கலின் திறனையும் காணமுடியவில்லை. சாதாரணமான ஒரு ஆட்டம் இது.

ஆட்டத்தின் நாயகன் பிரான்சின் தூராம்.

கோலடிக்கும் எத்தனங்கள் பிரான்சு 5 போர்த்துக்கல் 12 ஆகவும் பந்தை வைத்திருத்தல் பிரான்சு 41% போர்த்துக்கல் 59% ஆகவும் காணப்பட்டது. 3 மஞ்சள் அட்டைகள் மட்டுமே காட்டப்பட்டன.



இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சம். கோல்கணக்கில் 3 கோலுடன் நிற்கும் ஹென்றி இப்போட்டியில் எந்தக்கோலையும் அடிக்கவில்லை. எனவே தங்கக்காலணிGolden Shoe விருது ஜேர்மனியின் குளோஸவுக்கு என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது. குளோஸ 5 கோலுடன் முன்னணியில் உள்ளார். இந்த இருவருடன் இதற்கான போட்டியில் ஜேர்மனியின் பொடொல்ஸ்கியும் கூடவே நிற்கிறார். மூவருக்கும் விளையாடுவதற்கு ஒரு போட்டி கைவசம் உள்ளது. குளோஸவுக்கான வாய்ப்பு பிரகாசமானது.


கடைசி இருநிமிடங்களில் கவுண்டுபோனது ஜேர்மனி




ஜேர்மனி எதிர் இத்தாலி
0:0/0:0/0:2*நீடிப்பு நேரம்
அரையிறுதிப்போட்டியின் முதல் போட்டி பலமில்லியன் ஜேர்மனிய ரசிகர்களின் அழுகையுடன் முடிவடைந்துள்ளது. ஜேர்மனியின் மிகப்பெரிய டோற்முண்ட் விளையாட்டரங்கில் பலமான அணியெனக்கருதப்பட்ட ஜெர்மனி அணியுடன் மற்றொரு பலம்வாந்த அணியான இத்தாலிய அணி மோதிய விளையாட்டு இது. இரு அணிகளுமே சமநிலையில் நின்று விளையாடியது போன்று காணப்பட்டாலும் இத்தாலியிடமே பந்துக் கட்டுப்பாடு அதிகம் (58% )இருந்தது. இத்தாலி கோல் அடிக்காமல் தவிர்க்கும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் பல பந்துகளை














வெளியே அடிக்க நேர்ந்தது. அதன் காரணமாக 12 CORNER KICKவாய்ப்புக்களை இத்தாலிக்கு அள்ளி வழங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக அவைகளில் 11ஐ கோலாகாமல் காப்பாற்றுவதிலும் வெற்றிகண்டனர் ஜேர்மனிய அணியினர். ஜேர்மனிக்கோல் காப்பாளர் சிறப்புறச்செயல்பட்டு கோலாக வேண்டிய பல அடிகளைத் தடுத்தார். ஆனாலும் ஆட்டம் முடியும் தருணத்தில் இத்தாலி பெற்ற கடைசி 12வது CORNER KICK ஜேர்மனியின் காலை வாரிவிட்டது.

ஆட்டநேரம் 90 நிமிடத்தில் எவரும் கோலடிக்காமல் நீடிப்பு நேரம் 30 நிமிடம் வழங்கப்பட்டது. அதன் முன் பாதி முடிந்து மறுபாதியும் முடிவடையும் நேரம், இனி மூலம் தீர்வு காணப்படும் என்று எண்ணியிருந்த வேளையில் தங்களுக்குக் கிடைத்த 12வது Corner Kickஐ சரிவரப்பயன்படுத்தி 119வது நிமிடத்தில் கோலொன்றை குறோஸ்ஸோ அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜேர்மனிய வீரர்கள் மீள முன்னரே அடுத்த நிமிடத்தில் அடுத்த கோலை டெல் பீறோ அடித்தார். அத்துடன் 0:2 என்கிறவகையில் பெரும் வெற்றியை கடைசி நேரத்தில் பெற்ற இத்தாலி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இனி ஜேர்மனி 3வது இடத்தைப்பெற நாளை தோற்கும் அணியுடன் விளையாடும். ஆட்டத்தின் Corner Kicks வாய்ப்புக்கள் 12 இத்தாலிக்கும் 4 ஜேர்மனிக்கும் என்றவகையில் காணப்பட்டன.

சொந்தநாட்டில் 4வது தடவையாக உலககிண்ணத்தினை தங்கள் நாடு நிச்சயம் கைப்பற்றும் என ஆவலுடன் பார்த்திருந்த ஜேர்மனிய விசிறிகள் மிகத் துயரத்தில் ஆழ்ந்துபோய் உள்ளனர்.
ஆட்டத்தின் நாயகனாக இத்தாலியின் பிர்லோ தெரிவாகியுள்ளார். அந்த இறுதி 2 நிமிடங்களும் காப்பாற்றப்பட்டு தண்டனை உதை PENALTY KICKS தீர்மானத்துக்குச் சென்றிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடும். அவ்வாறான நிலையில் ஜேர்மனியை காப்பாற்றிய அனுபவ காப்பாளர் லேமன் ஜேர்மனிக்கு வாய்த்திருந்தார்.

Monday, July 03, 2006

உலகக்கிண்ண விளையாட்டரங்குகள்








லககிண்ணப்போட்டிகள் நிறைவடையும் வேளை நெருங்கிவருகிறது. உள்ளவை இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே. இத்தருணத்தில் இப்போட்டிகள் நடாத்தப்பட்ட விளையாட்டரங்குகளைப் பற்றிய சில தகவல்கள் இங்கு பதிவாகின்றன

ஜேர்மனியில் பெருநகரங்கள் ஒவ்வொன்றும் பெரும் விளையாட்டரங்குகளைக் கொண்டுள்ளன. நாடுமுழுவதிலும் 1500க்கு மேற்பட்ட விளையாட்டரங்குகள் உள்ளன. பிரபல்யமான கால்பந்து விளையாட்டுக்கழகங்கள் ஒவ்வொன்றும் தமக்கென அரங்குகளைக் கொண்டுள்ளன.

உலககிண்ணப்போட்டிகள் நடத்தாப்படுவதற்காக 12 பெரு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் உள்ள சிறந்த விளையாட்டரங்குகள் தெரிவு செய்யப்பட்டு மீள நவீன வசதிகளுடன் செப்பனிடப்பட்டன. சில புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. வழமையான இருக்கைகள் குறைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு கொண்டுவரப்பட்டன. மியூனிச் நகரில் பாரிய ஒலிம்பிக் விளையாட்டரங்கு ஏற்கனவே இருந்தாலும் 280 மில்லியன் ஈரோக்கள் செலவில் புதிதாக ஒரு விளையாட்டரங்கு உருவாக்கப்பட்டது. இங்குதான் இப்போதைய உலகக்கிண்ணப்போட்டிகளின் முதற்போட்டி 9/6/06ல்(ஜேர்மனி எதிர் கோஸ்ரறிகா)கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.




BERLIN OLIMPIA STADIUM
தலை நகரில் 1993இல் நிர்மாணிக்கப்பட்டது. 2004ல் நவீன வசதிகள் கொண்டதாக 242 மில்லியன் ஈரோ செலவில் நவீனப்படுத்தப்பட்டது.
76,000 இருக்கைகள்.


உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
66,000

www.olympiastadion-berlin.de





DORTMUND WESTFALEN STADIUM
1974ல் நிர்மாணிக்கப்பட இது 2003ல் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டது.
81,264 இருக்கைகள். ஜேர்மனியின் பெரிய விளையாட்டரங்கு.

உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
67,000

www.stadion-live.de
www.bvb.de





MUNICH WORLD CUP STADIUM
Bavaria மாநிலத்தலைநகர் மியூனிச்சில் 2005ல் நிர்மாணிக்கப்பட்டது.
நிர்மாணச்செலவு 286 மில்லியன் ஈரோ. 69,901 இருக்கைகள்.
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
59,400

www.allianz-arena.de






GELSENKIRCHEN Arena Auf Schalke
2001ல் North Rhine-Westphalia மாநிலத்தில் Gelsenkirchen நகரில் நிர்மாணிக்கப்பட்டது. 61,524 இருக்கைகள்
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
48,000

www.veltins.arena.de





STUTTGART Gottlieb-Daimler-Stadion
Baden-Württemberg மாநிலத்தலைநகரில் ஸ்ருட்காட்டில் 1933ல்
நிர்மாணிக்கப்பட்ட இது2006ல் நவீனமயப் படுத்தப்பட்டது.
58,000 இருக்கைகள்
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
47,700

wwww.gottlieb-daimler-stadion.de





HAMBURG AOL Arena
வடபகுதி துறைமுக நகரில்(Free and Hanseatic City of) Hamburg 2000ல் நிர்மாணிக்கப்பட்டது. 55,989 இருக்கைகள்.
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
45,000

www.aol-arena.de




FRANKFURT Commerzbank-Arena
Hesse மாநிலத்தில் நாட்டின் பெரும் வர்த்தகக் கேந்திர நகரில்
2000ல் நிர்மாணிக்கப்பட்டது. 52,000 இருக்கைகள்.
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
43,000

www.commerzbank-arena.de




COLOGNE RheinEnergieStadion
North Rhine-Westphalia மாநிலத்தில் 2004ல் நிர்மாணிக்கப்பட்டது.
50,374 இருக்கைகள்
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
40,600

www.stadion-koeln.de



KAISERSLAUTERN Fritz Walter Stadion
Rhineland-Palatinate மாநிலத்தில் 1920ல் நிர்மாணிக்கப்பட்ட இது 2005ல்
நவீனமயப்படுத்தப்பட்டது. இருக்கைகள் 48,500
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
40,000

www.fck.de/stadion




HANOVER AWD- Arena
Lower Saxony மாநிலத்தலைநகர் ஹனோவரில் 1954ல் நிர்மாணிக்கப்பட்ட
இது 2005ல் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டது. 48,993 இருக்கைகள்
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
39,000

www.awd-arena.de




LEIPZIG Zentralstadion

Saxony மாநிலத்தில் ஒரு பெரிய நகரான லைப்ஸிக்கில் 2004ல் நிர்மாணிக்கப்பட்டது. 44,300 இருக்கைகள்
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
39,000

www.zentralstadion.de




NUREMBURG Frankenstadion
Bavaria மாநிலத்தின் இன்னொரு அரங்கு. 1928ல் நிர்மாணிக்கப்பட்ட இது 2005ல் நவீனமயப்படுத்தப்பட்டது.
இருக்கைகள் 48,000
உலககிண்ணப்போட்டிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கைகள்
37,000

www.franken-stadion.de