Saturday, July 01, 2006

பிரான்சின் பெரும் எழுச்சி !!!

இறுதிக் காலிறுதிபோட்டி.
பிரேசிலை எதிர்த்து பிரான்சு.
பிரான்சை பிரேசில் இலகுவாக வென்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம். ஏனெனில் முதல் சுற்றில் தனது குழுவில் முதல் 2 போட்டிகளில் சுவிஸ் கொரியா ஆகிய நாடுகளுடன் விளையாடியதில் வெற்றிதோல்வியற்ற நிலை கண்டநாடு பிரான்சு . குழுவில் 5புள்ளியுடன் 2ம் இடம்பெற்று, தட்டுததடுமாறித்தான் இறுதிச்சுற்றுக்கே தெரிவான நாடு பிரான்சு. சுவிச்சர்லாந்து தான் குழுவில் முதலாம் இடத்தில் இருந்தது.
எல்லோருடைய எதிர்பார்ப்புக்களையும் தகர்த்து, 1998ல் தன் நாட்டு உலக கிண்ணத்தில் காட்டிய சுறுசுறுப்பையும் விளையாட்டு உச்சத்திறனையும் மீண்டும் வெளிக்காட்டி, காலிறுதியுடன் கால்பந்து உலகப்பெருவீரன் பிரேசிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பெருமிதத்துடன் அரையிறுதிக்கு வந்திருக்கிறது பிரான்சு. உண்மையில் இன்னொரு பிரான்சிய எழுச்சி இது என்பதில் ஐயமில்லை. இந்த பெருமிதத்துக்கு அனைத்து பிரான்சிய வீரர்களும் பாடுபட்டார்கள் என்றாலும் ZIDANE , HENRYஆகியோர்அவர்களில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக முன்னணியில் நிற்கிறார்கள். ZIDANE இன்று மிகச்சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் நாயகனும் அவரே.

முதல் பாதியில் ஆட்டம் சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. இரு தரப்பினரும் கோலடிக்க முயன்றனர். ஆனால் அடிக்க இயலவில்லை.
பின்பாதி ஆட்டம் தொடங்கி சிறுது நேரத்தில் சிடான் மிகச்சரியாக அடித்த பந்து ஒன்றை இலகுவாக HENRY கோலுக்குள் தட்டிவிட்டார். அதனை தடுக்கக்கூடிய எந்த வாய்ப்பும் பிரேசில் கோல்காப்பாளருக்கு இருக்கவில்லை.
இதன் பின்னரே ஆட்டத்தில் படுதீவிரம் தொற்றிக்கொண்டது. இன்னொரு கோலை அடித்து சமநிலைக்கு கொண்டுவருவதற்கு பிரேசில் வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடியும் தற்காப்பு நிலையை பிரான்சு வீரர்கள் கடுமையாக கைக்கொண்டதனால் அதனை உடைத்து கோலடிப்பது சாத்தியப்படவில்லை.

போட்டியின் இறுதி நிமிடங்கள் மிக மிகப்பரபரப்பாக இருந்தன.
1998இல் பிரான்சில் தோற்றதுக்கு சேர்த்து இப்போட்டியில் கணக்குத் தீர்ப்பார்கள் பிரேசில்காரார்கள் என்ற எண்ணமெல்லாம் பொய்யாகி கால்பந்து உலகத்தின் முதல் நிலை நாடு பரிதாபமாக வெளியேறிவிட்டது. பிரேசிலைத் தோற்கடித்ததன் மூலம் மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக பிரான்சு உருவாகியுள்ளது. அடுத்து அது சந்திக்க இருப்பது போர்த்துக்கலை. அதனை வென்றால் ஜேர்மனி அல்லது இத்தாலியை இறுதிப்போட்டியில் சந்திப்பார்கள்.
பந்துக்கட்டுப்பாடு பிரேசில் 44% பிரான்சு 56% எனக்காணப்பட்டமை பிரான்சின்
வேகத்தையும் உற்சாகத்தையும் சுட்டுகிறது. பிரான்சு 13 தடவையும் பிரேசில் 11 தடவையும் கோலடிக்க முயன்றுள்ளனர். ஆட்டத்தில் 7 முறை மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன . இதில் 4 பிரேசில் வீரர்களுக்கு எதிராக.

காலிறுதிச்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி நான்கு அணிகளாக வந்தவை அனைத்துமே ஐரோப்பிய அணிகள். மற்றைய அனைத்துக் கண்டங்களைச் சார்ந்த அணிகளும் வெளியேற்றப்பட்டுவிட்டன. பிரேசிலும் ஆர்ஜன்ரீனாவும் காலிறுதியுடன் வெளியேற்றப்பட்டமையே இவ்வுலகக்கிண்ணப் போட்டியின் சிறப்பு அம்சமாகப் பதியப்படும்.

கோல்கணக்கில் இப்போது ஜேர்மனியின் KLOSE 5 , PODELSKI 3, பிரான்சின் HENRY 3 ஆகிய மூவர் முன்னணியில் உள்ளனர். (ரொனால்டோ உட்பட இன்னும் 5 பேர் 3 கோலுடன் இருந்தாலும் அவர்களது அணிகள் வெளியேறிவிட்டதால் இனிச்சந்தர்ப்பம் கிட்டாது. )
பிரான்சு, போர்த்துக்கல், ஜேர்மனி,இத்தாலி ஆகிய அணிகளின் போட்டிகளில்
இறுதிப்போட்டிக்கு செல்பவர் யார் என்பது 4ம் 5ம் திகதிகளில் தெரிந்துவிடும்.
உலகத்துக்கு ரசிகர்களுக்குஇன்னும் 4 சிறப்பான போட்டிகள் காத்திருக்கின்றன.
ஜேர்மனி 4வது தடவையா இத்தாலி 4வது தடவையா பிரான்சு 2வது தடவையா கிண்ணத்தை கையகப்படுத்தப்போகின்றன? அன்றேல்
போர்த்துக்கல் வரலாற்றில் முதல் தடவையாக நாயகனாகப்போகிறதா என்கிற கேள்விகளுக்கு விடை தரும் அரை இறுதிப் போட்டிகள் செவ்வாயன்று தொடங்குகின்றன. கணிப்புகள், யூகங்கள் சொல்லமலிருப்பதே நல்லது.
பிரேசில் 6வது முறை கிண்ணத்தை கொண்டுசெல்லும் என்கிற கணிப்பு பொய்யாகிப்போன அனுபவம் மிகப்பலருக்கு வாய்த்துள்ளது.

நேற்று லேமன்! இன்று றிகார்டோ!!


போர்த்துக்கல் வெற்றி
இங்கிலாந்து தோல்வி
(0:0/0:0/3:1pso)
சமநிலை, நீடிக்கப்பட்ட நேரத்திலும் மாறாத நிலைமை. எனவே நேற்றைய ஜேர்மனி எதிர் ஆர்ஜன்ரீனா போட்டி போலவே தண்டனை உதை மூலம்
வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட வேண்டிய நிலை. நேற்று ஜேர்மனியின் கோல் காப்பாளர் LEHMANன் திறன் ஜேர்மனிக்கு வெற்றியை வழங்கியது. இன்று போர்த்துக்கலின் காப்பாளன் RICARDO ஒப்பற்ற திறமை போர்த்துக்கலை அரை இறுதிப்போட்டிக்கு இட்டுச்செல்கிறது. உலக கிண்ணப்போட்டிகளில் முதன் முதலாக அரையிறுதிப்போட்டியில்
போர்த்துக்கல் நுழைந்துள்ளது.
முன்னைய அரைக்காலிறுதிப்போட்டியில் நெதர்லாந்துடன் மோதியபோது 9 மஞ்சள் 2 சிகப்பு என அட்டைகள் பெற்றுச் சாதனை புரிந்த போர்த்துக்கல் இங்கிலாந்தினை காலிறுதிப்போட்டியில் சந்தித்தது. இந்த அட்டைகளின் தாக்கம் காரணமாக போர்த்துக்கல்

நிதானத்தை கடைப்பிடிக்கும் இங்கிலாந்து இலகுவாக வென்றுவிடும் என கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. முதல்பாதி கோலற்றபாதியாகியது.
2ம் பாதி இங்கிலாந்துக்கு சோதனையாக மாறியது. தொடங்கி சில நிமிடங்களில் இங்கிலாந்து அணித்தலைவர்
BECKHAM காயமடைந்து வெளியேறினார். 10 நிமிடம் கழித்து 62ம் நிமிடத்தில் மோசமாக ஆடிய ROONY சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆயினும் ஆட்டம் முவடையும் வரை எவரும் கோலடிக்கவில்லை. எனவே நேர நீடிப்பு 30 நிமி. வழங்கப்பட்டது. அதிலும் மாற்றம் ஏற்படாமையால் தண்டனை உதை Penalty Shoot-out மூலம் வெற்றி தோல்விக்கு முடிவு செய்யப்பட்டது.
இங்குதான் தனது அதிதிறமையை போர்த்துக்கலின் கோல்காப்பாளர் ரிகார்டோ வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்கள் LAMPARD, GERRARD, CARRAGHER ஆகியோர் அடித்த பந்துகளை RICARDO பிடித்து விட்டார். HARGREAVES மட்டும் ஒரு கோலடித்தார்.




போர்த்துக்கல் தரப்பில் VIANA ,PETIT அடித்த பந்துகள் வெளியே சென்றுவிட்டன. ஏனைய SABROSA, POSTIGA,RONALDO ஆகிய வீரர்களது பந்துகள் கோலாகின. RICARDO வால் போர்த்துக்கல் வென்றது. அத்துடன் Penalty Shoot-out மூலம் 3 கோல்களை பாதுகாத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் உ.கி.வரலாற்றில் RICARDO பெற்றுக்கொண்டார்.
பந்து வைத்திருத்தல் நிலைமை 43% இங்கிலாந்தும் 57% பிரான்சும் எனக் காணப்பட்டது. கோலடிப்பதற்கான எத்தனங்கள் போர்த்துக்கல் 29 ஆகவும் இங்கிலாந்து 13 ஆகவும் காணப்பட்டது. போர்த்துக்கலின் கோல் எத்தனங்களை 10 பேருடன் தடுத்து நிறுத்திய இங்கிலாந்து தண்டனை உதையில் தோற்றுப்போனமை வருத்தம் தரும் செய்தியாகும். 1966ல் கிண்ணம் வென்ற இங்கிலாந்து 40 ஆண்டுகளின் பின் அதனை வெற்றிபெற எண்ணிவந்து கால் இறுதியுடன் வெளியேறிவிட்டது. ஆட்ட நாயகன் இங்கிலாந்தின் HARGREAVES OWEN

ஜேர்மனியுடன் மோத வருகிறது இத்தாலி



இத்தாலி எதிர் உக்ரைன் 3:0
காலிறுதிப்போட்டியின் 2வது போட்டியிது. ஹம்பேர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் இத்தாலியை எதிர்த்து உக்ரைன் விளையாடியது. உக்ரைன் உலககிண்ணப்போட்டிகளுக்கு முதன்முதலாக வந்த நாடு. இத்தாலி 3 தடவைகள் உலகக்கிண்ணத்தை கைவசப்படுத்திய அனுபவம் மிகுந்த நாடு. எனவே இத்தாலி இலகுவாக உக்ரைனை தோற்கடித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. போட்டியும் அவ்வாறே அமைந்தது. 3 கோல்களை அது அடித்தது. உக்ரைனால் ஒரு கோலையும் அடிக்க இயலவில்லை. ஆனாலும் இறுதிவரை அது கோலடிப்பதற்காகப் போராடியது. 13 தடவைகள் உக்ரைன் கோலடிக்க முயன்றது. இத்தாலி அம்முயற்சிகளை முறியடித்துவிட்டது. இத்தாலியின் கோல்காப்பாளர் BUFFON சிறப்பாக செயல்பட்டார். இவர் இத்தாலிக்காக 60 போட்டிகளில் பங்கு கொண்ட JUVENTUS கழகத்தின் அனுபவவீரர். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரைக்காலிறுதிப்போட்டியின்போது ஆட்டத்தின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டவர்.
போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே இத்தாலி வீரர் ZAMBROTTA இலகுவாக முதல்கோலை அடித்துவிட்டார். அதன் பின் நீண்ட நேரத்துக்கு இரு தரப்பினாலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. உக்ரைனின் நம்பிக்கை நட்சத்திரம் SHEVCHENKOவின் முயற்சிகளை இத்தாலிவீரர்கள் இலகுவாக தடுத்து விட்டார்கள்.
59வதுநிமிடத்தில் அடுத்த சோதனை உக்ரைனுக்கு. TOTTI யால் அளவாக கொடுக்கப்பட்ட பந்தினை இலகுவாக 7மீற்றர் தூரத்திலிருந்து தலையால் தட்டி 2வது கோலினை TONI இறக்கினார். அடுத்து 10 நிமிடங்களே யானபோது அடுத்த கோலையும் மிக அருகிலிருந்து(3மீ) TONIயே இலகுவாக இறக்கினார். வெல்வதற்கான எந்தவிதமான நம்பிக்கைக்கும் இடமற்ற நிலைமையிலும் உக்ரைன் வீரர்கள் சளைக்காது விளையாடினர். 60% பந்தினை வைத்திருந்தவர்கள் அவர்கள் தான். உக்ரைன் அணியில் மூவருக்கு மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இத்தாலித் தரப்புக்கு எதுவுமில்லை.
இத்தாலியின் நடுக்களவீரர் GATTUSO ஆட்டத்தின் சிறந்தவீரராகத் தெரிவானார்.

இத்தாலி 4.7.இல் யேர்மனியை அரையிறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கிறது. இதுவும் ஒரு விறுவிறுப்புமிக்க ஆட்டமாக அமையும்.

Friday, June 30, 2006

ஜேர்மனியின் வெற்றி! அது லேமனின் வெற்றி!!



0:0/1:1/(4:2pso)=5:3
LEHMANN Jens >>>>>


காலிறுதி ஆட்டத்தின் முதல் போட்டி மிகமிக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதல் பாதி பரபரப்பு இல்லாமல் எத்தரப்பும் கோலடிக்காமல் 0: 0 என முடிவடைந்தது. பின்பாதி தொடங்கியதும் Corner Kick வகையில் றிகுஎல்மே கொடுத்த பந்தை அயாலா தலையால் தட்டியதன்மூலம் ஆர்ஜன்ரீனா முதல் கோலை 49வது நிமிடத்தில்அதிரடியாக இறக்கியது. அத்துடன் விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. ஜேர்மன் அணியின் வீரர்கள் ஆவேசமடைந்தவர்களாக ஆடத்தொடங்க அவர்களை கோலடிக்காமல் பாது காப்பதிலே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஆர்ஜன்ரீனாவீரர்களுக்கு உருவானது. தங்களது ஒற்றைக் கோலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டிருந்த ஆர்ஜன்ரீனியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று80வது நிமிடத்தில் கிடைத்தது. BALLACK இடப்புறத்திலிருந்து அனுப்பிய பந்தை லாவகமாக BOROWSKI தூக்கிக்கொடுக்க ஜேர்மனியின் முன்னணி வீரர் KLOSE தலையாலிடித்து கோலாய் (இது அவர்கணக்கில் 5வது) இறக்கினார். அத்துடன் ஜேர்மனிய ரசிகர்களின் ஆரவாரம் பேரலையாய் எழுந்து நாடுமுழுவதையும் பரவசப்படுத்தியது.

அணிகள் இரண்டும் சமநிலை கண்டன. அதன் பின்பு இருதரப்பும் கோலடிக்காமையால் மேலதிக 30 நிமிடத்துக்கான அவசியம் உருவானது. இரு 15 நிமிட விளையாட்டுகள். நிலையில் மாற்றமில்லை. ஆயினும் கடைசி 15 நிமிடத்தில் ஒரு கோலை அடித்துவிட வேண்டுமென்பதில் மிகுந்த ஆவேசத்துடன் ஆர்ஜன்ரீனா வீரர்கள் விளையாடினர். ஆட்டத்தில் 58% பந்தை வைத்திருந்தவர்கள் அவர்கள்தான். ஜேர்மன் தரப்பு 42% மட்டுமே. ஆனாலும் கோல் சமநிலை உடையவில்லை. இதற்கு முன் ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் கிளின்ஸ்மன் - KLOSE , SCHNEIDER , SCHWEINSTEIGER என்பவர்களுக்குப் பதிலாக அதிரடியாக ஆடக்கூடிய ODONKOR (62நிமி), BOROWSKI (74நிமி) NEUVILLE (86நிமி)ஆகியோரை களத்தில் இறக்கியிருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. ஆர்ஜன்ரீனா தரப்பில் காயம்காரணமாக கோல்காப்பாளர்ABBONDANZIERI ம் மற்றும் CRESPO , RIQUELME என்பவர்களும் மாற்றப்பட்டு FRANCO, CAMBIASSO, CRUZ என்பவர்கள் உள்வந்திருந்தனர்.

தண்டனை உதை Penalty Kick மூலமாக வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய வேளை ஆனதும் ரசிகர்கள் மிக பரபரப்படைந்தவர்களாயினர். இதில் ஜேர்மனி வீரர்கள் சிறப்பாகச் செய்தனர். நெவில், பல்லாக்,பொடெஸ்கி, புறோவ்ஸ்கி நால்வரும் தங்கள் சந்தர்ப்பங்களை கச்சிதமாக செய்து 4 கோல்களை இறக்கினர். ஆர்ஜன்ரீனாக் காப்பாளருக்கு பிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டாத கச்சிதமான அடிகள்!

மறுதரப்பில் குறுஸ்,றொட்ரிகுயெஸ் கோலடிக்க, அயாலா, கம்பியாஸோ ஆகியோர் ஜேர்மனிக் காப்பாளர் ஜென்ஸ் லேமனிடம் கோட்டை விட்டு விட்டனர்.லேமன் அதிசிறப்பாக செயல்பட்டு ஆர்ஜன்ரீனா வீரர்கள் அடித்த இரு பந்துகளை தடுத்துவிட்டார்.

உண்மையில் லேமனின் திறனே ஜேர்மனியின் வெற்றிக்கும் அரையிறுதி நுழைவுக்கும் வழிசெய்தது. இறுதி முடிவாக 5:3 என்கிற வகையில் ஜேர்மனி பெரும் வெற்றியைப் பெற்று அரையிறுதிப்போட்டிக்கு செல்கிறது.



ஆட்டத்தின் நாயகனாக அணித்தலைவர் BALLACK தெரிவாகியுள்ளார். இது 2வது தடவை.

Wednesday, June 28, 2006

அரைக்கால் இறுதி ஆட்டங்களில் கடைசி நான்கு ஆட்டங்கள்

8வது போட்டி
பிரான்சு எதிர் ஸ்பானியா 3:1
அரைக்காலிறுதிப்போட்டிகளில் இறுதியாகநடைபெற்ற இப்போட்டியே சிறப்பானதெனச்சொல்லலாம். இறுதிநேரம் வரை விறுவிறுப்பாக ஆடப்பட்டது .28வது நிமிடத்தில் பிரான்சின் தூராம் பப்லோவை வீழ்த்தியதனால் கிடைத்த தண்டனை உதையைப் பயன்படுத்தி விலா அடித்த கோலுடன் ஸ்பானியா முன்னிலை கொண்டது. அத்துடன் போட்டியில் மிகுந்த விறுவிறுப்பும் தொற்றிக்கொண்டது. முற்பாதிநேரம் முடிவடைவதற்கு முன்பாக 41ம் நிமிடத்தில் பிரான்சின் றிபேறி ஒரு கோலை இறக்கினார். இடைவேளையின் பின் இருதரப்பும் மிக கடுமையாக போராடினர். ஆனாலும் வெற்றிதோல்வியற்ற நிலையே நீண்ட நேரத்துக்கு நீடித்தது. ஆட்டம் 30நிமிட மேலதிக நேரத்துக்கு கொண்டு செல்லப்படும் என கருதப்பட்டவேளையில் வியெறா சிடானினால் கொடுக்கப்பட்ட பந்தொன்றை தலையால் இடித்து அற்புதமாக கோலாக்கினார். அத்துடன் பிரான்சு முன்னணி வகித்தது. அந்நிலையை மாற்ற ஸ்பானிய வீரர்கள் பெருமுயற்சிகளைமேற்கொண்டனர். பந்துக்கட்டுப்பாட்டில் அவர்களே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்தனர். 90 நிமிடங்கள் முடிந்த பின் வழங்கப்பட்ட 3நிமிட நேரத்துக்குள் பிரான்சு அணித்தலைவர் சிடான் இன்னொரு கோலையும் சாகசமாக இறக்க ஆட்டம் 3:1 என்ற வகையில் முடிவடைந்தது. பிரான்சு காலிறுதிப் போட்டியில் பிரேசிலை சந்திக்கவுள்ளது.

ஆட்டநாயகன் பிரான்சின் வியெறா
பந்துக்கட்டுப்பாடு பிரான்சு 39% ஸ்பானியா 61%


7வது போட்டி
பிரேசில் எதிர் கானா 3:0
உலககிண்ணப் போட்டிகளில் 17வது தடவை கலந்து கொள்ளும் பிரேசிலுக்கும் முதன்முதலாக உலக கிண்ணப்போட்டிக்கு வந்திருக்கும் கானாவுக்குமிடயிலான போட்டி இது. இலகுவாக பிரேசில் வென்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.
ஆயினும் இலகுவாக பிரேசில் வெல்லவில்லை. பந்துக்கட்டுப்பாடும் கானாவிடமே அதிகம் இருந்தது. கானா வீரர்களே அதிகமாக(20முறை) கோலடிக்க முயன்றார்கள். ஆயினும் பிரேசிலின் கோல் காப்புவீரரது திறன் காரணமாக ஒரு கோலைக்கூட அவர்களால் அடிக்க இயலவில்லை. அதேசமயம் 11முறை கோலடிக்க முயன்ற பிரேசில் அதில் மூன்றில் வெற்றி கண்டது. இறுதிநிலை 3:0இப்போட்டியின் சிறப்பம் ஓர் உலகசாதனை நிகழ்த்தப்பட்டதுவாகும். ரொனால்டோ போட்டியின் 5வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் உலகக்கிண்னப்போட்டிகளில் அதிக கோல் அடித்தவீரர் என்னும் பெருமையைப் பெற்றார். 22.6.06இல் ஜேர்மனியின் முல்லரது 14 கோல்சாதனையை சமப்படுத்திய ரொனால்டோ 15வது கோலை இன்று அடித்தார்.
ஆட்டநாயகன் சே றொபெர்ட்டோ (2வது தடவை)
பந்துக்கட்டுப்பாடு பிரேசில் 48% கானா 52%


6வது போட்டி
உக்ரைன் எதிர் சுவிச்சர்லாந்து 0:0 /3:0
முதன் முதலாக தண்டனை உதைமூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்ட விளையாட்டு இது.
இலகுவாக வெற்றி பெற்றுவிடும் சுவிஸ் என்ற எதிர்பார்ப்பு பலரிடமிருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்கியதுமே அந்த எதிர்பார்ப்புகள் பொய்யாகிவிட்டன. உக்ரைன் வீரர்களின் சிறந்த தடுப்பாட்டம் காரணமாக சுவிஸால் கோலெதையும் அடிக்க இயலவில்லை. உக்ரைனுக்கும் அதே நிலைமைதான். 90நிமிட ஆட்டத்தில் கோலற்ற சமநிலை நிலவியதால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் அதே நிலைமைதான். யாரும் கோலடிக்கவில்லை. அதனால் தண்டனை உதை மூலமாக வெற்றி தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது.இதில் பரிதாபகரமாக சுவிஸ் தோற்றுப்போனது. ஒரு கோலைக்கூட சுவிஸ்வீரர்களால் அடிக்க முடியவில்லை. உக்ரைன் 3:0 என்கிற வகையில் வெற்றியை தன்வசப்படுத்தி காலிறுதி ஆட்டத்துக்குள் சென்றுள்ளது. அதில் இத்தாலியை அது சந்திக்கும்.முதன் முதலாக உலக கிண்ணப்போட்டிகளுக்கு வந்த உக்ரைன் இந்த நிலைக்கு முன்னேறியதமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.முக்கியமான இன்னொரு அம்சம் ஒரேயொரு மஞ்சள் அட்டை மட்டுமே (சுவிஸ்வீரர் பார்னெற்றாவுக்கு எதிராக) காண்பிக்கப்பட்டமையாகும். முன்னைய நெதர்லாந்து எதிர் போர்த்துக்கல் கறுப்பு ஆட்டத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாக இவ்வாட்டம் அமைந்திருந்தது.

ஆட்டத்தின் நாயகன் உக்ரைன்னின் சொவ்கோவ்ஸ்கி
பந்துக்கட்டுப்பாடு சுவிஸ் 55% உக்ரைன் 45%


5வது போட்டி
இத்தாலி எதிர் அவுஸ்திரேலியா 1:0
இறுதி நிமிடம் வரை மிக விறுவிறுப்பாக நடைபெற்றபோட்டி இது. 90 நிமிடங்கள் வரை எவரும் கோலடிக்கவில்லை. அடுத்த 30 நிமிடங்களுக்கான விளையாட்டு நடைபெறும் என கருதிய வேளையில் மேலதிகமாக வழங்கப்பட்ட 3 நிமிட வேளையில் அவுஸ்திரேலிய வீரர்கள் செய்த பெருந்தவறு ஒன்று காரணமாக தண்டனை உதை ஒன்று இத்தாலிக்கு வழங்கப்பட்டது. 75ம் நிமிடத்தில் களமிறக்கப்பட்டிருந்தடொட்டி கச்சிதமாக அதனைக் கோலாக்கியமையால் இத்தாலி கால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நீண்ட இடைவெளியின் (1964க்கு) பின்பு உலக கிண்ணப்போட்டிக்கு தகுதி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா தன் கடைசி நேரத்தவறால் காலிறுதிப்போட்டியை இழந்து வெளியேறுகிறது. இத்தாலி வீரர் நிமிடத்தில் மெற்றறாஸி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறப்பட்டதனால் 51 நிமிடத்தின் பின்னர் இத்தாலி 10பேருடன் விளையாடியது.

ஆட்டத்தின் நாயகன இத்தாலியின் BUFFON
பந்துக்கட்டுப்பாடு இத்தாலி 42% அவுஸ்திரேலியா 58%

அரைக்கால் இறுதி ஆட்டங்களில் முதல் நான்கு ஆட்டங்கள்

4 வது போட்டி
போர்த்துக்கல் எதிர் நெதர்லாந்து
ஒரு கறுப்பு ஆட்டம் அதில் 20 அட்டைகள் (16 மஞ்சள்+4 சிகப்பு)
இதுவரை நடைபெற்ற போட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிக மோசமான விளையாட்டு இது. இரு தரப்பினரும் விளையாட்டு விதிகளை மீறி ஆளுக்காள் மோதிக்கொண்ட ஆட்டமாக இது அமைந்தது.அணிக்கு இருவர் இருவராக நால்வர் சிவப்புஅட்டைகாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.போர்த்துக்கல் வீரர்களுக்கு 9 மஞ்சள் அட்டையும்நெதர்லாந்து வீரர்களுக்கு 7 மஞ்சள் அட்டையுமாகமொத்தம் 16 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.பந்தை அடிப்பதனைவிட ஆளை எதிராளியை விழுத்துவதிலேயே குறியாயிருந்தார்கள் இரு தரப்பினரும்.நடுவரும் உதவியாளர்களும் போட்டியை நடாத்துவதில் மிக சிரமம் அடைந்தார்கள்.போர்த்துக்கலின் மனிஸ் 23வது நிமிடத்தில் ஒரு கோலைப்போட்டார்.அதன் பின் இருதரப்பும் எந்தக்கோலையும் அடிக்கவில்லை. நெதர்லாந்து 20 தடவைகள் முயன்றது. ஆனால் கோல் போடும்வாய்ப்பு அவர்களுக்கு கிட்டவேயில்லை.பந்துக்கட்டுப்பாடும் நெதர்லாந்து அணியிடமே மிகுந்திருந்தது.ஆனால் கோல் போடும் வாய்ப்புக்களை இழந்துபோட்டிகளிலிருந்து அது வெளியேறியுள்ளது.வென்ற போர்த்துக்கலுக்கு அடுத்த மோதல் இங்கிலாந்துடன்.

ஆட்டநாயகன் போர்த்துக்கலின் மனிஸ்.
பந்துக்கட்டுப்பாடு போர்த்துக்கல் 38 % நெதர்லாந்து 62%


3வது போட்டி
இங்கிலாந்து எதிர் ஈக்குவடோர்
60வது நிமிடத்தில் 30 யார் தூரத்திலிருந்து இங்கிலாந்து அணித்தலைவர் பெக்காம் அடித்த கோல் இங்கிலாந்தை காலிறுதி போட்டிக்குள் நுழைத்துள்ளது. முதல் பாதியில் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கவில்லை. பிற்பாதியில் போட்டி கடுமையாக இருந்தது. பெக்காமின் கோலின் பின் ஈக்குவடோர் வீரர்கள் சுறுசுறுப்பாக விளையாடினாலும் கோல் அடிக்க வசதிப்படவில்லை. இரு தரப்புமே கோலடிக்கும் பல சந்தர்ப்பங்களை தவற விட்டனர்.
ஆட்ட நாயகன் இங்கிலாந்தின் ரெறி ஜோன்.
பந்துக்கட்டுப்பாடு இங்கிலாந்து 51% ஈக்குவடோர் 49%


2வது போட்டி
ஆர்ஜன்ரீனா எதிர் மெக்ஸிகோ
இப்போட்டியும் மிக விறுவிறுப்பாக அமைந்தது. அத்துடன் நீடிக்கப்பட்ட நேரத்துக்கு விளையாடப்பட்ட முதல் விளையாட்டாகவும் அமைந்தது. ஆட்டம் தொடங்கி மெக்ஸிக்கோவின் மார்குஎஸ் அடித்த முதல் கோலுடன் ஆட்டம் பரபரப்படைந்தது. மெக்ஸிக்கோ ரசிகர்கள் மிக உற்சாகம் கொண்டவர்களாக ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அது ந்ந்டிக்கவில்லை. 10வது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனாவின் கிறிஸ்போ அடித்த பந்து மெக்ஸிக்கொ வீரர் போர்கெற்றியின் தற்பாதுகாப்பு முயற்சியின் போது எதிர்பாராத விதமாக தனது பக்கத்துக்கு அடித்த கோலாக மாறி விட்டமையால் ஆர்ஜன்ரீனா 1:1 எனச் சமநிலையை பெற்றது. பின்பு ஆட்டம் முடிவடையும் வரை இரண்டுஅணிகளும் கடுமையாக போராடின. ஆனால் கோல் எதையும் அடிக்காமையால் மேலதிக நேரம் 30 நிமிடம் வழங்கப்பட்டது. 98வது நிமிடத்தில் மாக்ஸி அடித்த கோலுடன் 2:1 என ஆர்ஜன்ரீனா வெற்றி வாய்ப்பை பெற்றது. கடுமையாக போராடியும் மெக்ஸிக்கோவால் காலிறுதிக்கு தெரிவு செய்யப்பட முடியாமல் வெளியேறும் 2வது அணியாக ஆனது.
ஆட்ட நாயகன் ஆர்ஜன்ரீனாவின் மாக்ஸி றொட்றிகுயெஸ்.
பந்துக்காட்டுப்பாடு ஆர்ஜன்ரீனா 51% மெக்சிக்கோ 49%


முதல் போட்டி
ஜேர்மனி எதிர் சுவீடன்
மிக விறுவிறுப்பான போட்டி சுவீடனுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஜேர்மனி காலிறுதிப்போட்டி யில் அட்டகாசமாக நுழைந்துள்ளது. போட்டி தொடங்கிய நான்காவதுநிமிடத்திலேயே பொடொஸ்கி அடித்த முதலாவது கோலுடன் ஜேர்மனி முன்னிலை வகித்தது. தொடர்ந்து 12வது நிமிடத்தில் 2வது கோலையும் அவரே அதிரடியாக இறக்கினார். கோலிறக்குவதற்கான சுவீடனின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. சுவீடனின் வீரர் லூஸிக் ஆட்டத்தின் 35 நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இறுதி 16 அணிகளிலிருந்து முதலில் வெளியேறும் அணியாகியது சுவீடன்.
ஆட்டத்தின் நாயகனாக ஜேர்மனியின் குளோஸ
பந்துக்கட்டுப்பாடு ஜேர்மனி 63% சுவீடன் 37%

முதல் சுற்றில் அணிகள் நிலை

2006 உலககிண்ணப் போட்டியில் சுழற்றி முறை LEAGUE
சுற்றில் அணிகள்பெற்ற புள்ளிகள்

குழு A
ஜேர்மனி----------3+3+3=9
ஈக்குவடோர்--------3+3=6

போலந்து-----3
கோஸ்ரறிகா--0


குழு B
இங்கிலாந்து------3+3+1=7
சுவீடன்-------------1+3+1=5

பரகுவே--------3
டிறினிடாட்---1

குழு C
ஆர்ஜென்ரீனா------3+3+1=7
நெதர்லாந்து---------3+3+1=7

ஐவறிகோஸ்ற்--3
சேர்பியா------0


குழு D
போர்த்துக்கல்------3+3+3=9
மெக்சிக்கோ----------3+1=4
அங்கோலா--1+1=2
ஈரான்----------2


குழு E
இத்தாலி-------------3+1+3=9
கானா---------------------3+3=6

செக் குடியரசு--3
அமெரிக்கா------1

குழு F
பிரேசில்---------------3+3+3=9
அவுஸ்திரேலியா----3+1=4

குரோசியா--1+1=2
ஜப்பான்------1


குழு G
சுவிச்சர்லாந்தது--1+3+3=7
பிரான்சு---------------1+1+3=5

கொரியா-----3+1=4
டோகோ------0


குழு H
ஸ்பானியா---------------3+3+3=9
உக்ரைன்--------------------3+3=6

துனீசியா------------1
சவுதி அரேபியா--1

198..........32..........16..........1

உலகெங்குமிருந்து 198 நாடுகள் பங்குபற்றிய தெரிவுப்போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 32 நாடுகள் பங்குகொண்டு ஜேர்மனியில் 9ம் திகதியன்று ஆரம்பமானது 18வது உலக கிண்ணப்போட்டி. அதில் சுழற்சி முறையிலான (League)முற்பகுதிப்போட்டிகள் 48 நடைபெற்று முடிந்துவிட்டன. சுழற்சி முறையில் இருந்து இறுதிச்சுற்றுக்கு 16 நாடுகள் தேர்வு பெற்றுள்ளன. இத்தேர்வு பற்றிய சில தகவல்கள்..........
(1)கால்பந்தாட்டத்தில் முன்னணிவகிக்கும் ஐரோப்பிய நாடுகளே அதிகம் தெரிவாகியுள்ளன.
(2)ஐரோப்பிய வட்டகையில் 14 நாடுகள் போட்டியிட்டு 10 நாடுகள் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளன.
(3)தென்அமெரிக்க வட்டகையில் 5 நாடுகள் போட்டியிட்டு பிரேசில், ஆர்ஜன்ரீனா,ஈக்குவடோர் ஆகிய 3 நாடுகள் தெரிவாகியுள்ளன.
(4)உலகின் ஏனைய வட்டகைகள் சார்பில் போட்டியிட்ட 13 நாடுகளில்கானா, மெக்சிக்கோ, அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தெரிவாகியுள்ளன.
(5)ஆசிய வட்டகையிலிருந்து இறுதிச்சுற்றுக்கு ஒருநாடுகூடத் தேறவில்லை என்பது வருத்தம்மிகு செய்தியாகும்.
இனி தோற்றவர் வெளியேற்றப்படும் இறுதிச்சுற்று. ஜேர்மனிக்கு எதிராக சுவீடன் மோதும் ஆட்டத்துடன் இறுதிச்சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இறுதிச்சுற்றில் போட்டியிடும் அணிகளின் விபரம் இது.
இறுதிச்சுற்றின் முதல் 8 மோதல்கள்(அரைக்காலிறுதி ஆட்டங்கள் )
01)ஜேர்மனி எதிர் சுவீடன்
02)ஆர்ஜன்ரீனா எதிர் மெக்சிகோ
03)இங்கிலாந்து எதிர் ஈக்குவடோர்
04)போர்த்துக்கல் எதிர் நெதர்லாந்து
05)இத்தாலி எதிர் அவுஸ்திரேலியா
06)சுவிஸ் எதிர் உக்ரைன்
07)பிரேசில் எதிர் கானா
08)ஸ்பானியா எதிர் பிரான்சு


தோற்றவர் வெளியேறுவர் (Knock out) என்கிற வகையில் நடைபெற வேண்டியவை 15 போட்டிகளே . எனினும் மூன்றாம் இடத்துக்கான ஒரு போட்டி அரையிறுதிப் போட்டிகளில் தோற்றுப்போகும் இருநாடுகளுக்கிடையே நடைபெறவுள்ளதனால் இறுதிச்சுற்றில் 16 போட்டிகள் நடைபெறவுள்ளன.

சாதனையாளன் ரொனால்டோவும் கோல் மழையும்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் 22ந்திகதி இரவு நடைபெற்ற இரு போட்டிகளும் அதிககோல்கள் அடிக்கப்பட்டனவாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. 90 நிமிடங்களில் 9 கோல்கள்! பிரேசில் 4, ஜப்பான் 1, அவுஸ்திரேலியா 2, குரேசியா 2 என கோல்களை மாறிமாறி விளாசினர். PREMIERE எனும் தொலைக்காட்சி இரண்டு போட்டிகளையும் சமநேரத்தில் மாறிமாறிக்காட்டி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டது.
அவுஸ்திரேலியாவும் குரேசியாவும் ஆடிய ஆட்டமே மிக விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் மாறி மாறி அடித்த கோல்கள் இறுதிச்சசுற்றுக்கு செல்வதற்காக அவற்றின் பெயர்களை மாறி மாறி அட்டவணைப்படுத்திக்கொண்டு இருந்தன. 2 வது நிமிட சிர்னா வின் கோல் குரேசியாவை முன்னிலைப் படுத்த ஆட்டம் பரபரப்படைந்தது. 38, 56வது நிமிடங்களில் மாறி மாறி வந்த நிலைவரம் 79வது நிமிடத்து கெவல் ஹரியின் (ஆட்டத்தின் நாயகன்)கோலுடன் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடிவடைந்தது. இவ்வாட்டத்தில் மூவர் ( 1அவு, 2 குரே)சிவப்பு அட்டைகாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
மறுபோட்டி ஜப்பன் எதிர் பிரேசில். 34வது நிடத்தில் ஜப்பானின் டமாடா முதல் கோலை பிரேசிலுகு எதிராக அடித்ததுடன் பரபரப்பு களைகட்டியது. முதல் பாதியின் இறுதியில் ரொனால்டோ (ஆட்டத்தின் நாயகன்) ஒரு கோலை தலையால் இடித்திறக்கி இவ்வுலக கிண்ணப் போட்டியில் தன் கோல் கணக்கையும் சாதனைப் பதிவையும் தொடங்கினார். 53வது 59வது நிமிடங்களில் பிரேசிலின் அடுத்த கோல்கள் விழ 81 நிமிடத்தின் தன் 2வது கோலை ரொனால்டோ அடித்தார். அத்துடன் உலக கிண்ணப்போட்டியில் உலக சாதனையான 14கோல்கள் என்பதனை அவர் சமன் செய்து சாதனையாளரானார். (Pele/Brazil 12 goals, Just Fontaine/France 13 goals Gerd Muller/Germany 14 goals).
கானாவுக்கு எதிரான 27ந்திகதிய போட்டியில் 15வது உலககிண்ண கோலை அடித்து தனிச் சாதனையாளனாக ஆகிவிட ரொனால்டோவுக்கு வாய்ப்புகள் அதிகம்.

முதல்சுற்று / 3ம் கட்டமோதல்கள் 16 போட்டிகள்

1)ஜேர்மனி 3 : 0 ஈக்குவடோர்
(2)போலந்து 2 : 1 கோஸ்ரறிகா
(3)இங்கிலாந்து 2 : 2 சுவீடன்
(4)பரகுவே 2 : 0டிறினிடாட்
(5)போர்த்துக்கல் 2:1 மெக்ஸிகோ
(6)ஈரான் 1:1 அங்கோலா
(7)நெதர்லாந்து 0 : 0 ஆர்ஜன்ரீனா
(8)ஐவறிகோஸ்ற் 3 : 2 சேர்பியா
(9) செக் குடியரசு 0:2 இத்தாலி
(10)கானா 2:1அமெரிக்கா
(11) ஜப்பான் 1:4 பிரேசில்
(12)குரேசியா 2:2 அவுஸ்திரேலியா
(13). சவுதி அரேபியா 0:1 ஸ்பானியா
(14). உக்ரைன் 1:0 துனீசியா
(15) ரோகோ எதிர் பிரான்சு
(16)சுவிஸ் 2:0 கொரியா

முதல்சுற்று/ 2ம் கட்டமோதல்கள் 16 போட்டிகள்

14.6.06 முதல் 19.6.06வரை

ஜேர்மனி 1:0 போலந்து
ஈக்குவடோர் 3:0 கோஸ்ராறிகா
இங்கிலாந்து 2:0 ரிறினிடாட்
பரகுவே 0:1 சுவீடன்
ஆர்ஜென்ரீனா 6:0 சேர்பியா
நெதர்லாந்து 2:01ஐவறிகோஸ்ட்
மெக்ஸிகோ 0:0 அங்கோலா
போர்த்துக்கல் 2:0 ஈரான்
செக்குடியரசு 0:2 கானா
இத்தாலி 1:1 அமெரிக்கா
ஜப்பான்1:1 குரேசியா
பிரேசில் 2:0அவுஸ்திரேலியா
பிரான்சு 1:1 கொரியா
ரோகோ 0:2 சுவிச்சர்லாந்து
சவுதிஅரேபியா 0:4 உக்ரைன்
ஸ்பானியா 3:1 துனீசியா

2வது கட்டத்துடன் 8 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.அவை......
1.ஜேர்மனி......... 2. ஈக்குவடோர்
3.இங்கிலாந்து. ..4.ஆர்ஜென்ரீனா
5.நெதர்லாந்து... 6.போர்த்துக்கல்
7. பிரேசில்......... 8.ஸ்பானியா என்பன.

முதல்சுற்று/ 1ம் கட்டமோதல்கள் 16போட்டிகள்

14.6.06
ஸ்பானியா எதிர் உக்ரைன்....... 4:0
டுனீசியா எதிர் சவுதி...............2:2
13.6.06
தென்கொரியா எதிர் ரோகோ...........2:1
பிரான்சு எதிர் சுவிஸ்...............1:1
பிரேசில் எதிர் குரேசியா..........1:1
12.6.06
அவுஸ்திரேலியா எதிர் ஜப்பான்........3:1
அமெரிக்கா எதிர் செக்.........0:3
இத்தாலி எதிர் கானா........ 2:0
11.6.06
நெதர்லாந்து எதிர் சேர்பியா..........1:0
மெக்ஸிகோ எதிர் ஈரான்.........3:1
போர்த்துக்கல் எதிர் அங்கோலா..........1:0
10.6.06
இங்கிலாந்து எதிர் பராகுவே.........1:0
டிறினிடாட் எதிர் சுவீடன்...........0:0
ஆர்ஜன்ரினா எதிர் ஐவரிகோஸ்ற்..........2:1
9.6.06
ஜேர்மனி எதிர் கோஸ்டோறிகா ........... 4:2
ஈக்குவடோர் எதிர் போலந்து ...........2:0

ஒருசிறுநகரில் உலககிண்ண நிகழ்வுகள்

ஹைல்புறோனில் உலககிண்ணம் 2006
ஜேர்மனியில் உலக கால்பந்தாட்டத்தின் 18வது போட்டி மிக கோலாகலமாக ஆரம்பித்து இருக்கிறது. உள்நாட்டு கால்பந்து இரசிகர்களாலும் அகிலமெங்கும் இருந்து வந்துள்ள இரசிகர்களாலும் ஜேர்மனி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜேர்மனியில் நகரங்கள், கிராமங்கள் எங்கும் மக்கள் போட்டிகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான பாரிய காட்சி ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள், தொழில் நிறுவனங்கள், கழகங்கள் என்பவை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளன. ஒவ்வொரு போட்டியைக்காணவும் இப்பாரிய தொலைக்காட்சிகளின் முன்னே இலட்சக்கணக்கில் இரசிகர்கள் குழுமுகின்றனர்.
ஹைல்புறோன் ஜேர்மனியின் தென்புறத்தே அமைந்துள்ள ஒரு சிறு நகரம். இங்கு HYUNDAI கம்பனியின் பிரதான ஆதரவுடன் நேரடி ஒளிபரப்பு THERESIENWIESE FESTPLATZ திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் போட்டியின் (ஜேர்மனி எதிர் கோஸ்ரொறிகா) போது
12ஆயிரத்துக்கு மேல் இரசிகர்கள் இங்கு கூடினார்கள். ஜேர்மனி விளையாடும் அடுத்த போட்டிகளின் போது இரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். ஹைல்புறோனில் முதல் போட்டியின்போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கு இணைத்துள்ளேன். இத்தளத்தில் இவ்வுலக கிண்ண போட்டிகளின் முடிவுகளை தமிழிலேயே பதிவதாக உத்தேசம்.




-