Saturday, July 01, 2006

பிரான்சின் பெரும் எழுச்சி !!!

இறுதிக் காலிறுதிபோட்டி.
பிரேசிலை எதிர்த்து பிரான்சு.
பிரான்சை பிரேசில் இலகுவாக வென்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம். ஏனெனில் முதல் சுற்றில் தனது குழுவில் முதல் 2 போட்டிகளில் சுவிஸ் கொரியா ஆகிய நாடுகளுடன் விளையாடியதில் வெற்றிதோல்வியற்ற நிலை கண்டநாடு பிரான்சு . குழுவில் 5புள்ளியுடன் 2ம் இடம்பெற்று, தட்டுததடுமாறித்தான் இறுதிச்சுற்றுக்கே தெரிவான நாடு பிரான்சு. சுவிச்சர்லாந்து தான் குழுவில் முதலாம் இடத்தில் இருந்தது.
எல்லோருடைய எதிர்பார்ப்புக்களையும் தகர்த்து, 1998ல் தன் நாட்டு உலக கிண்ணத்தில் காட்டிய சுறுசுறுப்பையும் விளையாட்டு உச்சத்திறனையும் மீண்டும் வெளிக்காட்டி, காலிறுதியுடன் கால்பந்து உலகப்பெருவீரன் பிரேசிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பெருமிதத்துடன் அரையிறுதிக்கு வந்திருக்கிறது பிரான்சு. உண்மையில் இன்னொரு பிரான்சிய எழுச்சி இது என்பதில் ஐயமில்லை. இந்த பெருமிதத்துக்கு அனைத்து பிரான்சிய வீரர்களும் பாடுபட்டார்கள் என்றாலும் ZIDANE , HENRYஆகியோர்அவர்களில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக முன்னணியில் நிற்கிறார்கள். ZIDANE இன்று மிகச்சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் நாயகனும் அவரே.

முதல் பாதியில் ஆட்டம் சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. இரு தரப்பினரும் கோலடிக்க முயன்றனர். ஆனால் அடிக்க இயலவில்லை.
பின்பாதி ஆட்டம் தொடங்கி சிறுது நேரத்தில் சிடான் மிகச்சரியாக அடித்த பந்து ஒன்றை இலகுவாக HENRY கோலுக்குள் தட்டிவிட்டார். அதனை தடுக்கக்கூடிய எந்த வாய்ப்பும் பிரேசில் கோல்காப்பாளருக்கு இருக்கவில்லை.
இதன் பின்னரே ஆட்டத்தில் படுதீவிரம் தொற்றிக்கொண்டது. இன்னொரு கோலை அடித்து சமநிலைக்கு கொண்டுவருவதற்கு பிரேசில் வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடியும் தற்காப்பு நிலையை பிரான்சு வீரர்கள் கடுமையாக கைக்கொண்டதனால் அதனை உடைத்து கோலடிப்பது சாத்தியப்படவில்லை.

போட்டியின் இறுதி நிமிடங்கள் மிக மிகப்பரபரப்பாக இருந்தன.
1998இல் பிரான்சில் தோற்றதுக்கு சேர்த்து இப்போட்டியில் கணக்குத் தீர்ப்பார்கள் பிரேசில்காரார்கள் என்ற எண்ணமெல்லாம் பொய்யாகி கால்பந்து உலகத்தின் முதல் நிலை நாடு பரிதாபமாக வெளியேறிவிட்டது. பிரேசிலைத் தோற்கடித்ததன் மூலம் மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக பிரான்சு உருவாகியுள்ளது. அடுத்து அது சந்திக்க இருப்பது போர்த்துக்கலை. அதனை வென்றால் ஜேர்மனி அல்லது இத்தாலியை இறுதிப்போட்டியில் சந்திப்பார்கள்.
பந்துக்கட்டுப்பாடு பிரேசில் 44% பிரான்சு 56% எனக்காணப்பட்டமை பிரான்சின்
வேகத்தையும் உற்சாகத்தையும் சுட்டுகிறது. பிரான்சு 13 தடவையும் பிரேசில் 11 தடவையும் கோலடிக்க முயன்றுள்ளனர். ஆட்டத்தில் 7 முறை மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன . இதில் 4 பிரேசில் வீரர்களுக்கு எதிராக.

காலிறுதிச்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி நான்கு அணிகளாக வந்தவை அனைத்துமே ஐரோப்பிய அணிகள். மற்றைய அனைத்துக் கண்டங்களைச் சார்ந்த அணிகளும் வெளியேற்றப்பட்டுவிட்டன. பிரேசிலும் ஆர்ஜன்ரீனாவும் காலிறுதியுடன் வெளியேற்றப்பட்டமையே இவ்வுலகக்கிண்ணப் போட்டியின் சிறப்பு அம்சமாகப் பதியப்படும்.

கோல்கணக்கில் இப்போது ஜேர்மனியின் KLOSE 5 , PODELSKI 3, பிரான்சின் HENRY 3 ஆகிய மூவர் முன்னணியில் உள்ளனர். (ரொனால்டோ உட்பட இன்னும் 5 பேர் 3 கோலுடன் இருந்தாலும் அவர்களது அணிகள் வெளியேறிவிட்டதால் இனிச்சந்தர்ப்பம் கிட்டாது. )
பிரான்சு, போர்த்துக்கல், ஜேர்மனி,இத்தாலி ஆகிய அணிகளின் போட்டிகளில்
இறுதிப்போட்டிக்கு செல்பவர் யார் என்பது 4ம் 5ம் திகதிகளில் தெரிந்துவிடும்.
உலகத்துக்கு ரசிகர்களுக்குஇன்னும் 4 சிறப்பான போட்டிகள் காத்திருக்கின்றன.
ஜேர்மனி 4வது தடவையா இத்தாலி 4வது தடவையா பிரான்சு 2வது தடவையா கிண்ணத்தை கையகப்படுத்தப்போகின்றன? அன்றேல்
போர்த்துக்கல் வரலாற்றில் முதல் தடவையாக நாயகனாகப்போகிறதா என்கிற கேள்விகளுக்கு விடை தரும் அரை இறுதிப் போட்டிகள் செவ்வாயன்று தொடங்குகின்றன. கணிப்புகள், யூகங்கள் சொல்லமலிருப்பதே நல்லது.
பிரேசில் 6வது முறை கிண்ணத்தை கொண்டுசெல்லும் என்கிற கணிப்பு பொய்யாகிப்போன அனுபவம் மிகப்பலருக்கு வாய்த்துள்ளது.

No comments: