Saturday, July 01, 2006

ஜேர்மனியுடன் மோத வருகிறது இத்தாலி



இத்தாலி எதிர் உக்ரைன் 3:0
காலிறுதிப்போட்டியின் 2வது போட்டியிது. ஹம்பேர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் இத்தாலியை எதிர்த்து உக்ரைன் விளையாடியது. உக்ரைன் உலககிண்ணப்போட்டிகளுக்கு முதன்முதலாக வந்த நாடு. இத்தாலி 3 தடவைகள் உலகக்கிண்ணத்தை கைவசப்படுத்திய அனுபவம் மிகுந்த நாடு. எனவே இத்தாலி இலகுவாக உக்ரைனை தோற்கடித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. போட்டியும் அவ்வாறே அமைந்தது. 3 கோல்களை அது அடித்தது. உக்ரைனால் ஒரு கோலையும் அடிக்க இயலவில்லை. ஆனாலும் இறுதிவரை அது கோலடிப்பதற்காகப் போராடியது. 13 தடவைகள் உக்ரைன் கோலடிக்க முயன்றது. இத்தாலி அம்முயற்சிகளை முறியடித்துவிட்டது. இத்தாலியின் கோல்காப்பாளர் BUFFON சிறப்பாக செயல்பட்டார். இவர் இத்தாலிக்காக 60 போட்டிகளில் பங்கு கொண்ட JUVENTUS கழகத்தின் அனுபவவீரர். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரைக்காலிறுதிப்போட்டியின்போது ஆட்டத்தின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டவர்.
போட்டி தொடங்கிய 6வது நிமிடத்திலேயே இத்தாலி வீரர் ZAMBROTTA இலகுவாக முதல்கோலை அடித்துவிட்டார். அதன் பின் நீண்ட நேரத்துக்கு இரு தரப்பினாலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. உக்ரைனின் நம்பிக்கை நட்சத்திரம் SHEVCHENKOவின் முயற்சிகளை இத்தாலிவீரர்கள் இலகுவாக தடுத்து விட்டார்கள்.
59வதுநிமிடத்தில் அடுத்த சோதனை உக்ரைனுக்கு. TOTTI யால் அளவாக கொடுக்கப்பட்ட பந்தினை இலகுவாக 7மீற்றர் தூரத்திலிருந்து தலையால் தட்டி 2வது கோலினை TONI இறக்கினார். அடுத்து 10 நிமிடங்களே யானபோது அடுத்த கோலையும் மிக அருகிலிருந்து(3மீ) TONIயே இலகுவாக இறக்கினார். வெல்வதற்கான எந்தவிதமான நம்பிக்கைக்கும் இடமற்ற நிலைமையிலும் உக்ரைன் வீரர்கள் சளைக்காது விளையாடினர். 60% பந்தினை வைத்திருந்தவர்கள் அவர்கள் தான். உக்ரைன் அணியில் மூவருக்கு மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இத்தாலித் தரப்புக்கு எதுவுமில்லை.
இத்தாலியின் நடுக்களவீரர் GATTUSO ஆட்டத்தின் சிறந்தவீரராகத் தெரிவானார்.

இத்தாலி 4.7.இல் யேர்மனியை அரையிறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கிறது. இதுவும் ஒரு விறுவிறுப்புமிக்க ஆட்டமாக அமையும்.

No comments: